ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள்

அ ந்த விமானம் அப்போதுதான் தரையிறங்கியிருந்தது. ‘பயணிகள் இறங்கலாம்’ என்ற அறிவிப்பு வந்து, விமானத்துக்குள் இருந்த விளக்குகள் பொருத்தப்பட்டன. அதுவரை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்த ‘ஸெல்போனை’ ஆன் செய்தேன். உடனே மணி அடித்தது.

ரொம்ப நேரமாக முயற்சி செய்யப்பட்ட அழைப்பு என்று தெரிந்தது; பேசினேன்.

அழைப்பு, டெல்லி சாகித்ய அகாடமியிலிருந்து. பேசியவர் சாகித்ய அகாடமியின் செயலாளர் திரு.அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி.

‘இத்தனை நாட்களாக டெல்லியில்தான் இருந்தேன்’ என்றதும், ‘இப்போது நீங்கள் டெல்லியில் இல்லையா?’ என்று கேட்டார். 

‘இப்போது சென்னைக்கு வந்து விட்டேன். விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தேன்.

‘அப்புறம் பேசலாம்’ என்று அவர் வைத்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ, தொடர்ந்து உற்சாகமாகப் பேசினார்.

சாகித்ய அகாடமியில் ‘பெல்லோஷிப்’ அந்தஸ்து பெற்றவனாயிற்றே நான்... அதனால் ஏதோ யோசனை கேட்கப் போகிறார் போல இருக்கிறது என்று எண்ணியபடியே நான் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். 

‘மூத்த எழுத்தாளர்களில் பலர் இப்போதெல்லாம் தொடர்ந்து எழுதுவதில்லை. அவர்களை எழுத வைக்க உற்சாகப்படுத்தும் ஒரு திட்டத்தைப் பற்றி யோசிக்கிறது சாகித்ய அகாடமி.

‘கீக்ஷீவீtமீக்ஷீ வீஸீ க்ஷீமீsவீபீமீஸீநீமீ’ என்று ஒரு திட்டம் எனத் தொடர்ந்து அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.

‘நல்லது. செய்யுங்கள்’ என்று அவரை உற்சாகப்படுத்திப் பேச்சை முடித்தேன்.

அடுத்த சில தினங்களில் சாகித்ய அகாடமியிலிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதில்,

‘உங்களிடம் தொலைபேசியில் பேசியபடி அந்தத் திட்டத்தில் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்’ என்ற தகவலும் அதற்குரிய ஒப்புதல் படிவமும் அனுப்பியிருந்தனர்.

அதில், ‘உங்கள் சுதந்திரப்படி நீங்கள் எழுதத் திட்டமிட்டிருக்கும் நாவலோ, கட்டுரையோ எழுதிப் பிரசுரித்துக் கொள்ள வேண்டும். அதில் சாகித்ய அகாடமியின் கீக்ஷீவீtமீக்ஷீ வீஸீ க்ஷீமீsவீபீமீஸீநீமீ திட்டத்தின் கீழ் இந்த நூல் பிரசுரிக்கப்படுகிறது என்ற விவரத்தை மட்டும் குறிப்பிட வேண்டும். மற்றபடி அந்த நூலின் மீது அகாடமிக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நூலைத் தயாரிப்பதற்கான முதல் தூண்டுகோல் இதுதான்.

சமீப காலமாக நான் ஏதும் எழுதத் திட்டமிடவில்லை. எழுதுவதை நிறுத்தி இருந்தேன் என்றே சொல்லலாம். காரணம். உடல் நலமின்மையே. மேலும், ‘எவ்வளவு காலம்தான் இயந்திரம்போல் எழுதிக் கொண்டிருப்பது?’ என்ற சலிப்பு உணர்ச்சி.

நான் உற்சாகமாக ஊக்கப்படுத்திய ஒரு திட்டம் இப்படி ‘என் தலையிலேயே வந்து விடியும்’ என்று அப்போது நினைக்கவில்லை.

இப்போது என்ன செய்வது? என்று பொறுப்போடு யோசிக்க ஆரம்பித்தேன். நண்பர்களிடம் யோசனை கேட்டேன். அவர்களோ, நான் பாதியில் நிறுத்திய பல நாவல்களைக் குறிப்பிட்டு ‘அதைத் தொடரலாமே’, ‘இதை ஆரம்பிக்கலாமே’ என்று உற்சாகமாக ஊக்கப்படுத்தினர்.

ஏற்கனவே ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், கலை உலக அனுபவங்கள், ஆன்மீக அனுபவங்கள் என்ற தலைப்புகளில் மூன்று நூல்களை எழுதி இருக்கிறேன்.

‘ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள்’ என்ற தொடரை கல்பனா மாத இதழில் ஆரம்பித்தேன். அந்தப் பத்திரிகையோடு அதுவும் நின்று போனது. அதை நினைவுபடுத்தியது மட்டுமல்லாமல் எழுதப்பட்ட அத்தியாயங்களின் நகல்களையும் அனுப்பி வைத்து,

‘இதைத் தொடர்ந்து எழுதி முடித்துக் கொடுத்தால் நானே அதை வெளியிடுவேன்’ என்று ‘தொடரும்’ பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பர் சேதுபதி எனக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

இந்தத் தூண்டுகோல் எனக்கும் இசைவாக இருந்தது. சாகித்ய அகாடமி அனுப்பிய ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினேன். அதன் விளைவே இந்நூல்.

அரசியல் அனுபவங்களையும் கலை உலக அனுபவங்களையும் எழுதும்போது நான் எவ்விதமான குறிப்புகளோ ஆதாரங்களோ (ஸிமீயீமீக்ஷீமீஸீநீமீ) இல்லாமல் நினைவுப் பதிவுகளையே ஆதாரமாகக் கொண்டு எழுத முடிந்தது. ஆனால் இப்போது ‘பத்திரிகை உலக அனுபவங்களை’ எழுதும்போது ஐம்பது ஆண்டு அனுபவங்களையும் தொடர்புபடுத்தி எழுதுவது அவ்வளவு சுலபமாக இல்லை. நினைவுச்சரடு அடிக்கடி அறுந்து போயிற்று. அதற்குக் காரணம் ஏற்கனவே அரசியல், கலை உலக அனுபவங்கள் எழுதும்போது வாராவாரம் தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் எழுதி வெளியிட வேண்டியிருந்தது.

இந்த வசதி இதுபோல் ஒரு நூலைத் தனியாக எழுதும்போது கிடைப்பதில்லை. அது எனக்குப் பழக்கமும் இல்லை. இந்தப் பழக்கமின்மையால் எழுதுவதற்கு இடையில் அதிக நாட்கள் இடைவெளி வேண்டியிருந்தது.

நண்பர்களிடமும் கலந்து பேச வேண்டியிருந்தது. பல பத்திரிகைகளின் பெயர் விடுபட்டுப் போய் இருந்தது. அவை நினைவுக்கு வரும்போது சேர்த்துக் கொள்ளப்படுவதால் ‘காலவரிசை’யில் தவறுகள் நேர்ந்தன. இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தக் குறைபாடுகளைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  ஏன்? பல வாசக நண்பர்கள் அக்குறைகளைத் தாங்களே திருத்திப் புரிந்து கொள்வார்கள் என்று கூட நம்புகிறேன்.

இத்தகு நண்பர்களால்தான், பத்திரிகைகளால்தான் நான் ஒரு எழுத்தாளனானேன். என் எழுத்தில் நம்பிக்கை வைத்து முதலில் என்னை எழுதத் தூண்டியவர் 1948-49களில் எனக்கு நண்பராக இருந்த திரு.ராமதாஸ் என்னும் போலீஸ்காரர்.

அதன்பிறகு என்மீது அன்பு கொண்ட உறவினர்களாலும் நண்பர்களாலும் என் அனுமதியின்றியே அவை பல பத்திரிகைகளில் பிரசுரமாயின. அவற்றை நான் எந்தத் தொகுதியிலும் சேர்க்கவில்லை. அதற்குக் காரணம் இருபது வயதுக்கு முன் நான் எழுதிய கதைகளை ‘முதிர்ச்சியற்றவை’ என்று நானே ஒதுக்கி விட்டதுதான். அவை சௌபாக்கியம், வசந்தம், நவஇந்தியா, ஜனசக்தி, காவேரி, பிரசண்ட விகடன், இமயம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவை என்று இப்போது நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

அப்போது சிறையிலிருந்து வெளிவந்திருந்த என் உறவினரும், கம்யூனிஸ்டுமான கடலூர் திரு. புருஷோத்தமன் அவர்கள் என்னைச் சந்தித்தபோது, ‘வெறும் காதல் கதைகளைப் பிற எழுத்தாளர்கள் மாதிரி நீ எழுதிக் கொண்டிருக்காதே. இன்றைய இளைஞர்களுக்கு  எவ்வளவோ பிரச்சனைகள்... அவற்றை வைத்து எழுது’ என்று அரிய யோசனையைக் கூறினார். அந்த யோசனை என்னுள்ளத்தில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அதன் பின்னர் நான் காதல் கதைகள் என்று எதுவுமே எழுதியதில்லை. அது குறித்து ஒருமுறை ஆனந்தவிகடனில், ‘நீங்கள் ஒரு காதல் கதை எழுதுங்களேன்’ என்று கேட்டபோது, ‘இதோ, ஒரு காதல் கதை’ என்ற தலைப்பில் ஒரு காதல் கதை எழுதினேன். காதலையும் ஒரு பிரச்னையாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. அப்படித்தான் யதார்த்தத்தில் இருக்கிறது. வெறும் ‘கிளுகிளுப்பு’களுக்காகவோ, வர்ணனைகளுக்காகவோ, ஆண் பெண் உறவுகளை விவரிக்கவோ நான் காதல் கதை எழுதியது இல்லை.

‘கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேல் காதல்’ என்பதால் என் கதைகளில் காதல் ஒரு பிரச்சினையே ஆயிற்று. என் எழுத்துக்கள் பிரச்சினைகளுக்குரிய கதைகள் ஆயின. பல விமர்சகர்கள் ‘பிரச்சினைகளுக்கு நானே தீர்வு காண்பதில்லை’ என்று குறைப்பட்டார்கள்.

கதையில் தீர்வு கண்டால் போதாது என்பதனால் சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதே என் கதைகளில் நான் செய்த வேலை. காலப்போக்கில் வாழ்க்கைதான் அதற்குத் தீர்வு காண வேண்டும். அவ்வாறே பல பிரச்சினைகள் தீர்வு கண்டிருக்கின்றன என்பதில் எனக்குத் திருப்தி.

நான் எழுதியதாலா அவை தீர்வு கண்டன? பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால் போதும்¢ என்று நான் தீர்மானித்தேன். அவ்விதம் எழுதப்பட்ட கதைகளுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறதோ, அந்த அளவு எதிர்ப்பும் இருக்கும் என்று நான் கண்டு கொண்டேன்.

மனிதன் பத்திரிகை நின்றபிறகு ஆசிரியர் விந்தன் புத்தகப் பூங்கா என்றொரு பதிப்பகம் ஆரம்பித்தார். அதன் வெளியீடாக, ‘ஒருபிடிசோறு’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியாயிற்று.          மஞ்சரி ஆசிரியர் திரு. தி.ஜ.ரங்கநாதன் தாமே முன்வந்து அதற்கொரு முன்னுரை எழுதினார். அந்த முன்னுரை எனக்கு மிகவும் பெருமை அளித்தது. 

ஆனந்த விகடன் பத்திரிகை, பொதுவாகப் ‘புத்தக மதிப்புரை’ எழுதுவதில்லை. இது தெரிந்திருந்தும் திரு.விந்தன் அவர்கள் மதிப்புரைக்காக அந்தப் புத்தகத்தை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தார். ‘மதிப்புரை எழுதாவிட்டால் என்ன? ஆசிரியர் குழு நண்பர்கள் படிக்கவாவது செய்யட்டுமே’ என்றார்.

அதைப் படித்துவிட்டுத்தான் நண்பர் மணியனும் சாவியும் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு எழுதுமாறு என்னை அணுகிக் கேட்டனர். நான் முதலில் சற்று ‘பிகு’ செய்து விட்டுப் பிறகு ஒப்பினேன்.

ஆனந்த விகடன் பத்திரிகை அச்சகத்தில் அப்போது, ‘ஓவர் டைம்’ செய்ய மாட்டோமென்று அச்சகத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் செய்து கொண்டிருந்தனர். ‘ஓவர் டைம்’ என்ற தலைப்பில் நானொரு சிறுகதை எழுதி ஆனந்த விகடனுக்குக் கொடுத்தேன். ‘கேட்டு வாங்கிய பின்- பிரசுரிக்க இயலாது என்று திருப்பித் தர மட்டுமே’ என்ற நினைப்போடுதான் எழுதினேன். என்னுடைய நினைப்புக்காக நான் வெட்கப்படும்படியும் வியப்படையும்படியும் அந்தக் கதை வண்ணப் படங்களுடன் ஆனந்தவிகடனில் பிரசுரமாயிற்று.

அதன் விளைவாக ஆனந்தவிகடன்மீது எனக்குப் பெருமதிப்பும்  ஆனந்த விகடனுக்கும் எனக்கும் நல்லுறவும் ஏற்பட்டது. தொடர்ந்து விகடனில் எழுதலானேன். அதன் பிறகு கல்கியிலும் எழுதினேன். இவ்விதமாகத் தமிழகத்தின் பிரபல பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் பிரசுரமாகத் தொடங்கின. வாசகர்கள் தந்த ஊக்கத்தினால் அந்தப் பத்திரிகைகளும் பத்திரிகை தந்த ஊக்கத்தினால் பதிப்பகத்தார்களும் எனது எழுத்துக்களை நூல்வடிவில் பிரசுரிக்க முன்வந்தனர். 

நூல்களை மட்டும் ஒரே பதிப்பகத்தார் மூலம் வெளிக்கொணர நான் விரும்பினேன். ஸ்டார் பிரசுராலயத்தின் அதிபஎர் திரு.கண. முத்தையா அவர்களின் சிபாரிசினால் மீனாட்சி புத்தக நிலைய அதிபர் திரு.செல்லப்பன் எனது கதைகளைத் தொகுப்புகளாக நூல்வடிவத்தில் வெளியிட்டு மேலும் பிரபலப்படுத்தினார்.

பின்னர், எனது சிறுகதைகளின் முழுத் தொகுப்பையும் நாவல்களின் முழுத் தொகுப்பையும் முதலில் கவிதா பப்ளிகேஷன்ஸ§ம், வர்த்தமானன் பதிப்பகமும் வெளியிட்டனர். தொடர்ந்து நாவல்களின் முழுத்தொகுப்பைக் கவிதா பப்ளிகேஷன்ஸே வெளியிட்டது. மேலும் எனது மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் கவிதாவே வெளியிட்டது. எனது குறுநாவல்களின் முழுத்தொகுப்பையும் மீனாட்சி புத்தக நிலையமும், எனது கட்டுரைகளின் முழுத்தொகுப்பையும் ஸ்ரீசெண்பகா பதிப்பகமும், பேட்டிகளின் தொகுப்பை, கபிலன் பதிப்பகமும் வெளியிட்டிருக்கின்றன. மேலும் மோதிபிரசுரம், கலைஞன் பதிப்பகம், கபிலன் பதிப்பகம், எனி இந்தியன் பதிப்பகம் ஆகியவையும் எனது நூல்களைப் பிரசுரித்து வருகின்றன. தேசிய அளவில் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, ஞானபீட் ஆகியவையும் எனது நூல்களை வெளியிட்டு வருகின்றன. 

தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட என் எழுத்துக்களுக்கு வாசகர்கள் பெருகினர்.

அதன் விளைவாக வேற்று மொழிகளிலும் எனது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அனைத்து இந்திய மொழிகளில் ‘நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, ‘ஜெயகாந்தன் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு வெளியிட்டது. இது தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், ஒரியா ஆகிய மொழிகளில் வேறு பதிப்பகங்களும் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிட்டன.

இந்திய மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், செக், ருஷ்யன், உக்ரைன், ஐப்பான் போன்ற பிறநாட்டு மொழிகளிலும் எனது எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்தன. இவையாவும் எனது பத்திரிகை அனுபவங்களின் தொடர்ச்சியும் நீட்சியும் ஆகும்.

இவை எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம் பத்திரிகை என்பதால் அவற்றை நன்றியுடன் நினைவு கூர்வதே இந்த நூலின் நோக்கம்.

என்னை எழுத வைத்த, நான் எழுதிய எல்லாப் பத்திரிகைகளின்  அனுபவங்களையும் இப்போதும் பெருமையுடன் நினைவு கூர்ந்து இதை நிறைவு செய்கிறேன்.

இந்த நூலை எழுதத் தூண்டுகோலாயிருந்த, சாகித்ய அகாடமிக்கும், உறுதுணையாக இருந்த நண்பர்கள் பி.ச.குப்புசாமி, திரு.சேதுபதி, அழகுற அச்சிட்டு வெளியிட்ட கபிலன் பதிப்பகம் திரு.அருணன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றி உரியது.

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site


 

கபில வரிசை

27/11/2009 17:11

published

  

© 2009 All rights reserved.

Make a website for freeWebnode