கொடி விளக்கு நூ‌ல் வெளியீடு

கவிஞர் சிற்பி வெளியிட பாவலர் ம.இலெ.தங்கப்பாவும் செவாலியே மதனகலியாணியும் பெற்றுக்கொள்கின்றனா்

உடன் ஆசிரியர் கவிஞர் இரா.மீனாட்சி

கவிஞர் சிற்பி அவர்களின் விமர்சனவுரை

ஆரோவில் தமிழ் மரபு மையம், சாகித்திய அகாதெமி இணைந்து நடத்திய மகாகவி தாகூர் - 150 
ஒருநாள் கருத்தரங்க விழாவில் கவிஞர் இரா. மீனாட்சி அவர்கள் எழுதிய 
கொடிவிளக்கு நூலை வெளியிட்டு சிற்பி அவர்கள் வழங்கிய விமர்சனவுரை


 
 
நவீனக் கவிதையிலே முதன்முதலாக மிகச் சிறப்பான தோற்றத்தைத் தந்து நவீனக் கவிதைக்கு வந்த கவிஞர்களில் நவீனக் கவிஞர்களில் முதல்வராக விளங்கக் கூடியவர் இரா. மீனாட்சி. எழுத்து இதழ் புதுக் கவிதையை வெளியிடத் தொடங்கிய காலத்தில் எழுத்து இதழிலேயே மீனாட்சி அவர்களுடைய கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவருடைய கவிதைகளிலே திண்ணை இருக்கும்; முற்றம் இருக்கும்; தெரு இருக்கும், மிக மிக நமக்கு நெருக்கமான பொருள்கள் எவையோ அவற்றோடு நமக்குச் சம்பந்தப்பட்டதாக அவருடைய கவிதைகள் இருக்கும்.  மதுரையில் பலகாலம் வாழ்ந்தவர். மதுரைச் செல்வி என்றே அவரை அழைக்கலாம்.  அந்தக் காலத்தில் அவர் எழுதிய கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. மீனாட்சியைக் குறித்து மீனாட்சி எழுதிய கவிதை. ‘மதுரை நாயகியே’ என்று மீனாட்சியை அழைத்து உன்னை வணங்குவதற்காக நான் வருகின்றேன். 
 
குளம்சுற்றி, கிளிபார்த்து 
உன்னை வணங்குவதற்காக வருகிறேன் 
வருகிறபொழுது உன்மகனே என்னை 
வழிவம்பு செய்கின்றான்? 
 
செய்தியும் புதிது. அந்தச் செய்தியை அவர் சொல்லிய விதமும் புதியது. 
 
உன் மகனே என்னை வழிவம்பு செய்கின்றான்? 
அழகி நீ, அந்தக் காலத்தில் எப்படி உலாப்போனாய்? 
 
என்று மீனாட்சியைப் பார்த்துக் கேட்கின்றார் நம்முடைய கவிஞர் மீனாட்சி அவர்கள். அவருடைய கவிதைகளில் ஒன்றான கொடிவிளக்கு என்பது நூலின் தலைப்பு. கொடிவிளக்கு என்ற 
கவிதையை மட்டும் நான் வாசிக்கின்றேன்.
 
வெயில் இத்தாலிக்கும்
குளிர் ஃபிரான்ஸ§க்கும் 
இடைப்பட்ட எல்லை பூமி;
குன்றுகள் சூழ்ந்த
செம்பாறைச் சிற்றூர்
எனது சிற்றடியால் அளக்கப்பட்டது.
கற்களால் ஆன பழைய வீடுகளில்
ஈரப்பசை பச்சைக் கருப்பாய் பூசியிருந்தது.
குறுகலான படிக்கட்டுத் தெருக்கள்
தண்ணீர் கொட்டும் ஊற்று வாய்கள்
வாசற்படியோரங்கள் தூணின் கைகள்
பாடும் கதவுகள் தோறும்
ஒருவகை திறந்தவாய் சிங்கமுகங்கள்.
பலநாள் பூஞ்சருகுக் குவியல்கள்
யாராலும் மிதிக்கப்படாமல்
பனியுடன் பாதைகளில் ஒட்டிக் கிடந்தன
பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில்
புனிதப் போர்கள் நிகழ்ந்த போதெல்லாம்
மதத் தலைவர்கள்
இங்கேதான் பாதுகாப்பாய்
பிரார்த்தனை செய்திருந்ததாக
கோட்டை போலிருந்த ஊரின்
தொடக்கக் கதவில்
தொல்லியல் துறையினர் எழுதி வைத்திருந்தார்கள்
இரும்புக் கைப்பிடியில் இருந்தது போலத் 
தெரிந்தது இரத்தக் காயம்.
அகழி அரண்
கற்பாலம் நெடிய மரக்கதவு
தடியாக இரும்புச் சங்கிலியைத் தொட்ட
பனிக்காற்றுடன்
கனமான மௌனம் சூழ்ந்திருந்தது.

தொலைதூர ஆல்ப்ஸ் மலைச் சரிவும்
தலைமீது நீலநிற வானமும்
சொந்தம் கூறியதால்
தென்பெண்ணையை எண்ணிக் கொண்டு
நிகழ்காலம் நின்றேன்.

பழைய கோட்டைக்குள் புதிய நவீனங்கள்
கதவு உள்வாங்கிக் கொண்டால்
அழகிய இல்லம்
முதிய கலைஞர் ஒருவரின் சித்திரக் கூடம்
அழைக்கப்பட்ட விருந்தினருடன்
ஆவல் பொங்கிட உள்மனை சென்றேன்.
காலம் என்னை நன்றாகவே
விழுங்கிக் கொண்டது.

ஏறி இறங்கி அழைத்துச் சென்றன
ஏராளமான மரப்படிகள்
துருப்பிடிக்காத இரும்புக் கிராதிகள் பின்னலிட்டிருந்தன
ஐரோப்பிய பளிங்குச் சிலைகள் நிமிர்ச்சியுடன் முறுவலித்தன.
சரித்திரப் பாதுகாப்புகள்
எங்கும் பளிச்சிட்டன.
ஒரு செல்வ வளமை வீடு அது
சிறிய அருங்காட்சியகம் போலவே தெரிந்தது.
குளியல் அறைகூட 
கூரையிட்ட குட்டியூண்டு
கடற்கரை போலிருந்தது.

நேற்றைய காலத்தில் அவர்கள்
தோத்தரித்த புத்தகங்களின்
தாள்களில் வைக்கோல் வாசனைகளையும்
காய்ந்த பூக்களின் நிறங்களையும்
நிலைப்படுத்தி வைத்திருந்தனர்

அடுத்த அறைக்குள் லாவண்டர்
ஊதாநிறம் மட்டுமே இன்றைய புதுசு

ஃபிரெஞ்சு மக்கள்
மிக நன்றாக உபசரிப்பார்கள்.
முகம் பார்த்து உணவிடுவார்கள்
உள்ளூர் ஒயினில் ஆரம்பித்து
பச்சைக் காய்கறிக் கலவைகளில் நிலைத்து
ஆட்டுப்பால் சீஸ்கட்டிகளைச் சிலாகித்து
நீளவாக்கில் ரொட்டிகளைத் தட்டிலிட்டு
இடையிடையே ஆரஞ்சுப் பழச்சாறு பரிமாறி
வேகவைத்தக் கறியும் சோறும் வண்ணக் கலவையாய்
பீங்கான் தட்டுகளில் பொலியும் அழகுகளுடன்
புன்னகை இணைத்துக் 
கதைபேசி, சிரித்து, மகிழ்ந்து
இசைகேட்டபடிக் களித்து
ஒயினில் முடிப்பார்கள்; இடையிடையே
காப்பியும் குடிப்பார்கள்

அன்று அந்த மலைப்பங்களாவில்
உண்பதாகப் பாவனை காட்டியபடி
சுற்றிலும் உள்ள
அழகியல் கூறுகளை
ஆராய்ந்து கொண்டிருந்தேன்
மைய மண்டபத்தில் விரிந்திருந்த 
பெர்ஜிய
இரத்தின கம்பளத்தின் நுனியில்
நடுநாயகமாக
கண்ணாடிக் கதவு பார்த்த சூரியனின்
ஒளிக்கதிர்களைப் பூசிக்கொண்டு
மகா பிரம்மாண்டமாக
ஒரு பித்தளைக் கொடிவிளக்கு!
தமிழ்நாட்டுச் சோழர் பாணியில்
செட்டிநாட்டு மக்கள் செய்விக்கும்
கோவில் திருவிளக்கு.

எனது உயரம் ஐந்தடி ஓரங்குலம்
என்னைவிட இருமடங்கு உயரத்துடன்
பொன்வண்ண எண்ணெய் விளக்கு
திருமகள் போல நின்றிருந்தது.
அடிப்பாதம் வட்டத்தட்டு மட்டுமே
ஐந்தடி விட்டமிருக்கும்
ஐந்து முகங்களுடன் நூற்றுக்கும் மேல்
கொடிகொடியாய்க் கிளைகளில் திரிவிளக்குகள்
நூறாண்டுகளுக்கு முன்வரை பொன்மேனியில்
பல ஆண்டுகள் பசுநெய் மணத்திருக்கும்
பஞ்சுத்திரி தாமரை மொட்டுப் போல சுடர் தந்திருக்கும்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
பாலைவன மணல் தாண்டி
இதோ இந்தப் ஃபிரான்ஸ் நாட்டு
குன்றத்தூரில் கொலுவிருக்கிறது.
ஏற்றப்படாத கொடிப்பூக்களின் முகங்கள்
ஒளிதர வேண்டி
எண்ணெயும் தாமரைத் திரியும் 
கொண்டு வா என
என்னைக் கெஞ்சிக் கேட்டன.

அடிப்பாதத்தின் விளிம்போரங்களில்
சுற்றிச் சுற்றி வந்து படித்துப் பார்த்தேன்
சென்றகாலத் தமிழ் வரிவடிவங்கள்
தெளிவாகப் பொளியப்பட்டிருந்தன
தந்தை பத்தர் மகன் பத்தர்
எந்த ஊர் உபயம்
இதைச் செய்வித்த வகை என்பதாக
நிவந்தங்கள் பிரகாசித்தன.

விருந்தினர்கள் திராட்சை இலைகளையும்
மீன் முள்ளுகளையும் 
ஓரங்கட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஐரோப்பிய மொழிகளில்
சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்
நான் மட்டும் என் தோள் தழுவிய
காஞ்சிப்பட்டில் இழை உருவிக் கொண்டு
தமிழில் எழுத்தெண்ணிப் படித்துக் கொண்டு
கங்கை சரஸ்வதியாய் காவிரி பவானியாய்
அடிஆழத்தில் அழுது கொண்டிருந்தேன்.
கொடி விளக்கு என் காதில்
கிள்ளை மொழியில் கிசுகிசுத்தது.

‘மகளே இந்நேரம் நம் ஊரில் 
குவளையாய், தவலையாய்,
சொம்பாய், தாம்பூலத்தட்டாய்,
பூச்சாடியாய் பாவை விளக்காய்,
வேறொரு சிலையாய் வார்த்து
உருக்கி ஊற்றியிருப்பார்கள்.
இங்கே இன்றுவரை விள்ளாமல் விரியாமல்
முழுதாகவே
அப்படியே இளமையுடன் இருக்கிறேன்
எல்லாம் நன்மைக்கே
என்றேனும் என்னை மீட்டெடுத்து
நம் ஊருக்கு எடுத்துப் போ!
அல்லது
இங்கேயேயரு தமிழன்னை கோவில் கட்டு.
அங்கேயாவது ஒளிச்சேவை 
செய்து கொள்கிறேன்’
 
என்று சொன்னதாம் அந்தக் கொடிவிளக்கு. இதைப் படித்த பொழுது மலையாளக் கவி சச்சிதானந்தனுடைய ஆரஞ்சு என்ற கவிதை எனக்கு ஞாபகம் வந்தது. ஒரு வீட்டிலே ஆரஞ்சுப் பழத்தைத் தின்று விட்டு குழந்தை விதைகளை எறிந்து விடுகிறது அவர் வீட்டிலே. அவருடைய மகள். அது செடியாக முளைக்கிறது. மரமாக வளர்கிறது. அதிலே பூக்கள் வருகின்றன. காய் வருகிறது. குழந்தை ஆசையோடு பழுத்திருப்பதாகப் பாவனை செய்கிற காயைப் பறித்துப் பார்க்க உள்ளே ஒன்றுமேயில்லை. மகள் அழுதாள், ஆரஞ்சுப் பழம் இல்லாமல் போய் விட்டதே என்று. நான் நினைத்தேன். எங்கேயோ வளர வேண்டிய வேர்களை விட்டு விட்டு இந்தச் செடி இங்கே வந்திருக்கிறது. 
 
அதனால் இது பலன்தராமல் இருக்கிறது என்று நான் நினைத்தேன். இந்த இரண்டு கவிதையிலே புலம் பெயர்ந்தோரின் துயரத்தை உருவகமாகச் சொல்லுகிற கவிதை அப்படிப்பட்ட அழகான கவிதைகள் பல இந்தக் கொடிவிளக்கிலே இருக்கின்றன. கொடிவிளக்கை வரைந்த கவிஞர் இரா.மீனாட்சி அவர்களுக்கு வாழ்த்துகள். ஓயாமல் ஆண்டுக்கொரு முறை கவிதை நூல் தந்து கொண்டிருக்கிற அவர்தம் ஆற்றலுக்கு வணக்கம் செலுத்தி இந்த நூலை வெளியிடுகின்றேன். 
 
அருணன் கபிலன்
 
அருணன் கபிலன் கொடிவிளக்கு
கொடி   விளக்கு - புதுக்கவிதை நூல் 
ஆசிரியர் - கவிஞர் இரா.மீனாட்சி
வெளியீடு: 
கபிலன் பதிப்பகம்,
321, மகாவீர் நகர்,
மூன்றாம் முதன்மைச் சாலை,
புதுச்சேரி    - 8
விலை - ரூ. 125/-
 

பிறைநிலாச் சூடிடும் வீடு


கவிதை என்பது உள்ஆற்றலின் ஓர் உன்னத வெளிப்பாடு. ஏனைய கவின்கலைகளை உள்ளடக்கிக் கொண்டு, எக்காலத்திலிருக்கும் வெளியிலும் நிறைந்திருக்கும் ஓர் ஒளித்திரள். மின்னாற்றலை ஏற்றிருக்கும் அருவுருவமானதோர் ஒலியலை.
இன்று எழுதப்படும் ஒரு கவிதையின் விதை பலகோடி ஆண்டுகள் முந்தைய பெரணிச் செடியின் ஒரு செல்புள்ளியாகக் கூட இருக்கலாம். இதோ, இந்த விநாடி அது தனது வேர்முகம் காட்டியிருக்கலாம். நாளை எனும் மறுகாலத்திலிருந்தும் மரபணுக் கூறாக வந்து இறங்கலாம். இப்படி எல்லையற்ற இந்த விண்ணையும் மண்ணையும் இணைக்கிற அல்லது கடக்கிற நிரந்தர உடுக்கள் ஒருமொழிச் சத்தத்தினுள் உணர்வலைகளாக இறங்கி, தம்மை ஒர் ஒழுங்கமைதிக்குள் இருத்தி வரிவடிவமாக வந்தமர்கின்றன.
நான்
கவிதை
நீ
எழுது
என்று தேர்ந்த மனிதரைக் கருவியாகக் கொண்டு அவர்களைக் கவிஞர்களாக்கி விடுகிற கவிதையின் இயல்பினை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன்.
சென்ற காலத்தின் அணுத்துகள் இன்றைய காலத்தின் மேகப்படலத்தை அணிந்திருந்தாலும் அது வருங்கால உருமாற்றத்தை எதிர்நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனுள் வீற்றிருக்கும் மையப்பொருள் நிரந்தரமானது. அழிவற்றது. உயிரிகளின் இசைஇயக்கம், சிற்றுயிர்களிடமும் பேருயிர்களிடமும் புதுப்புதுப் பொலிவுகளைக் கிளர்ந்தெழச் செய்து தன்னை விதைத்துக் கொண்டே செல்கிறது. மனிதர்கள் நாம், நமது மொழியில் கவிதைகளாக வரித்துக் கொள்கிறோம்.
கவிதைகளை நாம் எழுதுகிறோம் என்பதாக ஒரு வெளித்தோற்றம் கிடைத்தாலும், கவிதை நம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நம் கரம் பற்றி எழுத வைக்கிறது. இக்கவிதாசக்தி ஒரு நற்றாய். நல்லாசிரியர். உயிர்த்தோழன். உற்றதுணை. அற்புத மடிக்குழந்தை என்பதாக ஒவ்வொரு முறையும் நாம் உணருகிறோம்.
எனக்கு நினைவு தெரிந்த நாளாய்ப் பேசிக்கொண்டிருக்கிறேன். பிறகு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்மொழிப் பதிவுகள் கொண்ட இலக்கிய உலகத்தில் எனது முதல் கவிதை நூல் ‘நெருஞ்சி’ 1970-இல் வெளியாயிற்று. ஏறத்தாழ 45ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத்து, கண்ணதாசன், கணையாழி, தீபம், நாணல், அன்னம், கவி, ஓம்சக்தி, அமுதசுரபி, தொடரும் போன்ற தமிழகத்தின் சிறந்த இலக்கிய இதழ்களிலும் மற்றும் சில சிறு பத்திரிகைகளிலும் சிறப்பு மலர்களிலும் எனது கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆரோவில் கிராமச் செய்தி மடல் எனக்கு வாய்த்துள்ள மற்றொரு எளிய எழுத்து வாஹினி.
நெருஞ்சியைத் தொடர்ந்து சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், மீனாட்சி கவிதைகள், வாசனைப்புல், உதயநகரிலிருந்து எனும் ஏனைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டன.
இக்கவிதைகள் வாயிலாக உடல் சார்ந்த துன்பங்கள் இன்பங்கள், மனம் சார்ந்த வீழ்ச்சிகள் எழுச்சிகள், சமூகம் சார்ந்த ஏற்புகள் தகர்ப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றிற்கும் அப்பால் நான் எனும் என் உள்முக தரிசனத்தில் தணல் தகிக்காத நெருப்பினுள் இலையாகவும் அக்கினிக் குழம்பில் அலர்ந்தெழும் மலராகவும் சந்தன ஓடையின் இருகரை ஓரத்தில் செழிக்கும் வைரப் பொன் நாணலாகவும் வளர்ந்து வருகிறேன்.
எல்லாக் கணங்களும் தரும் அனுபவங்களை அப்படியப்படியே  தாளற்றித் தரும் பக்குவம் எம் விரல்களுக்கு இன்னமும் வந்து விடவில்லை. இயல்பாக வந்தமையும் சொல்லடுக்குகளை இயன்றவரை நம் தமிழில் இயற்றியிருக்கிறேன். நேற்று-இன்று-நாளை தளங்களிலிருந்து பயணப்பட்டிருக்கும் சந்தமொழிகள் இந்த ஆண்டில் இப்படியாகக் ‘கொடிவிளக்கு’ தொகுப்பில் அச்சிடப்பட்டுள்ளன.
ஆக, வாழ்ந்து வரும் வாழ்க்கையில் நேற்று என்பது யாவருக்குமே முக்கியமானது. இன்று என்பது சீராக நடந்தேறிக் கொண்டிருக்கிறது எனில், நேற்று எனும் அனுபவச் சாலைகளும் அவற்றுள் வேர்பிடித்து நின்றிருந்த கைகாட்டி மரங்களும் மறக்க இயலாதவை அல்லவா? அவரவர் சரித்திரம் நேற்றிலிருந்தே செதுக்கப்படுகிறது. வருங்காலம் எனும் நாளைய நாளை நோக்கி ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்து வைக்கும்போது இன்றைய நாள் நம்பிக்கை நீர் ஊற்றுகிறது. தமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை அனுபவித்தபின் அவற்றைச் சமமாகப் பாவித்தபடி பயணிக்கும் இந்த மனித யாத்திரையில் உடன்வரும் சக பயணிகள் நிறையப் பேர் கதைசொல்லிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் கவிதை கதைகளாகப் பொங்கலிடுகிறது. அடிப்படையில் நானொரு சமூகப் பணித்துறைப் பேராசிரியர். மனவளக் கலை வழிகாட்டி. எனவே, நிறைய மனங்களின் ஓசைகள் என்னை வந்து சேர்கின்றன.
இன்றிரவு நான் உறங்கவே இல்லை. கூடலூர்ப் பாண்டியின் பறையதிர்வும் நாகர்கோவில் செல்வியின் கரக ஒயிலும் கலைமாமணி சங்கரபாண்டியனாரின் 86 வயதுக் காவடியாட்டமும் என்னோடு ஐக்கியமாகிவிட்டன. இந்த மரபுச் சந்தங்கள் எனது மானஸ மரத்தில் கிளிகளாகப் பேசிக்கொண்டேயிருக்கின்றன. முன்னொரு நாளில், இப்படித் தடம் பதித்த மதுரை மாநகரச் சத்தங்களும் வாசனைகளும் வண்ணங்களும் ‘நேற்றுப் போலிருக்கிறது’ என்ற பகுதியில் இந்தக் கொடிவிளக்கில் ஏற்றப்பட்டுள்ளன. மதுரை மகளாகவும் அறியப்படும் என் ஒருமுக வாழ்க்கையில் பன்முக எழினிகள் என்னைச் சுற்றிலும் எத்தனையோ திரைகளாக ஏற்றி இறக்கப்பட்டுள்ளன. அத்திரைகள் காட்டும் சித்திர முகங்களாகச் சில பெண் குழந்தைகள், தோழிகள், என்னைப் பாதித்த அன்னையர் பலருள் ஒரு சிலர், ‘அவள், அவள்கள், அவர்கள்’ எனும் பகுதிக்குள் கொடி விளக்கேந்தி வந்து செல்கிறார்கள். இவர்களை நான் மட்டுமின்றி மற்றும் பலரும் அறிந்திருக்கக் கூடும். அவர்களுடன் எனக்குண்டான நெருக்கம் இத்தனை காலமாக, பாறைக்கடியில் உறைந்திருந்த முளைவிதைகளைப் போல இருந்திருக்கின்றது. ‘இப்போது எழுதிக் கொள்’ என்று விளைந்து வந்திருக்கிறது. இவர்களில்லாமல் நான் எங்கே வளர்ந்திருக்கப் போகிறேன்? நல்லகாலம் இப்போதாவது என்னுடைய வெளிச்ச எல்லைக்குள் வந்து புதிதாக்கிக் கொண்டு புத்தகமாகி இருக்கிறார்கள். நன்றி கூறுகிறேன்.
இதுவரை எழுதப்பட்டுள்ள சிலநூறு கவிதைகளுள் தொடர்ந்து பளிச்சிடுவது அன்பான மனித உறவுகளும் இயற்கை சார்ந்த அனுபவங்களுமே. இயற்கையோடு இணைந்த வாழ்வில் தன்னை மேலும் கண்டறியும் தேடல்களே இன்றும் தொடர்கின்றன. இயற்கையைப் பாராட்டிப் போற்றும் அன்புள்ள மக்களுடன் நெடிது வாழும் சூழல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு வாய்த்துள்ளது. இது ஒரு பெரும்பேறு. நகரியப் பரபரப்புகளை விட்டு விலகி, பனைமரங்களும் நொச்சிப் புதர்களும், வேனில் கொன்றைப் பூச்சரங்களும் வேம்பூத் தாரைகளும் எப்போதும் புங்க மரநிழல் பரப்பும் செம்மண் வரப்புகளும், மழைநாள் புல்லும் பச்சிலை மூலிகைகளும், கூழாங்கல் பாதைகளும் அணைத்திருக்கும் கனவு பூமியில் பணிக்களம் அமைந்து விட்டது எங்களுக்குக் கிடைத்த தேவவரம். காக்கைக் குருவிகளோடும், அணில், கீரிப்பிள்ளைகளோடும்  வாழ்ந்து வருகிறோம் என்பதால் பிரபஞ்ச உணர்வு எங்கள் குழந்தைகளிடமும் கூடுதலாக உள்ளது. நந்தவனத்தைச் சுற்றிக் காலைச் சூரியனுடன் உலாவச் சென்று விட்டுத் திரும்பும்போது செங்காவி ஓடு வேய்ந்த நம் வீட்டுக் கூரையைத் தொட்டிழுக்கும் பிறைநிலா, வீட்டையே தவசியாகக் காட்டும்போது அந்த ஒப்பற்ற ஓவியத்தை எப்படி எழுதாமல் இருக்க முடியும்?
எனது புறப்பயணங்களும் என்னை நெடுந்தொலைவுக்கு இட்டுச் செல்கின்றன மணிமேகலா தெய்வம் போல, கப்பல்களும், விமானங்களும் வேக ரயில்களும்.
எல்லைகள் கடந்து பலநாடுகளுக்கு என்னை அழைத்துப் போகும் அப்பயணங்களில் மனித, இன, மொழி தெரியாத ஊர்களிலும் பறவைகள், பசுக்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஓவிய மீன்கள், பச்சைப் புல்வெளிகள், வானவில் நிறங்கள் நம்முடன் பேசுகின்றன. அம்மொழிகள் தரும் உணர்வலைகளுக்கு எல்லை ஏது?
அப்படி ஒரு பயணத்தின்போது ஃபிரான்ஸ் தேசத்தில் என்னுடன் பேசிய வெண்கலக் கொடிவிளக்கு நேர்ந்து கொண்ட விண்ணப்பத்தை இந்நூலில் பதிவு செய்திருக்கிறேன். அதன் பெயராலேயே இக்கவிதைத் தொகுப்பு அறியப்படுகிறது என்பதைப் பொளிந்து கொள்கிறது எனது எழுதுகோல்.
எந்த மனிதருள்ளும் எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் உயிர்களிடையே அன்பும் காதலும் நட்பும் நிரம்பித் ததும்பி இருக்கின்றன. அவை என்னுள் கலந்து சிலிர்ப்புடன் மொழியானவை ‘எந்தையும் தாயும்’ பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, எது கவிதை என்பதும், இவற்றுள் எது எனக்கு மட்டுமே சொந்தமான கவிதை என்பதும் விளங்கிக் கொள்ள இயலாது போகிறது. எப்போதும் அடுத்த உயரத்திற்குக் கவிதையை உயர்த்தி எடுத்துச் செல்லும் உந்துதலே ‘கவிதையின் நான்காம் எழுத்து’ வரிசைக்குள் வெளிப்பட்டுள்ளது. இந்த அனுபவம் ஒரு வலியும் சுகமும் இணைந்த கலவை.
வடித்தெடுக்கும் கவிதைச் சிலைகளினூடே இந்த ‘கொடிவிளக்கு’ தொகுப்பு ஒரு சுயம்பு. மிகுந்த நேயத்துடன் வாசிப்பு அனுபவத்திற்கு இந்நூலை அச்சிட்டு ஆக்கியோரின் சார்பிலும் உங்களை வரவேற்கிறேன்.
 

தோழமையுடன்
இரா.மீனாட்சி

மாத்ரி மந்திர் நர்சரித் தோட்டம்

ஆரோவில் - 605 101 
விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாடு
 

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site


 

கபில வரிசை

27/11/2009 17:11

published

  

© 2009 All rights reserved.

Create a website for freeWebnode