பாடுகிறேன் பரமகுரு 

 

மரு. பரமகுரு

இன்னும் பாடுக பாட்டே.!

பாவலர்களில் மூன்றுவகை உண்டென்பர். தைத்திங்களில் பொங்கல் பற்றியும், புரட்டாசியில் நவராத்திரி பற்றியும் கவிதைகள் புனைந்து இதழ்களுக்கு அனுப்பும் இக்கவிஞர்களை ‘நாட்காட்டிக் கவிஞர்கள்’  என்பர். இரண்டாவது கூட்டத்தார் எப்போதோ எவரோ (சரியாகவோ, தவறாகவோ) தம்மைக் கவிஞர் எனக் கூறிவிட்டதால் அவ்வப்போது தம் ‘இருப்பைப்’ புலப்படுத்திக் கொள்பவர்கள். மிகச்சரியான வித்தகர்களால் அடையாளம் காணப்பெற்று, உரிய நேரத்தில், உரிய பணியாகத் திறமான கவிதைகளைப் படைக்கச் சொல்லும்போழ்தில் மனநிறைவு தரத்தக்க மணிக்கவிதைகளை வடித்துத் தருவோர் மூன்றாம் வகையினர். மூன்று தமிழையும் நன்கறிந்த பாவலர் பரமகுரு அவர்கள் மூன்றாம் வகைப் பாவலருக்கான நல்ல சான்றாவார். இப்படி அவரைப் பற்றி ஒரு தரச்சான்றிதழ் வழங்கிட என்ன காரணம்? அவர் செதுக்கித் தந்துள்ள ‘பாடுகிறேன் பரமகுரு’ என்ற நூல்தான் காரணம். இந்த நூலின் உள்ளடக்கம்: சோடை போகாத நன்முத்துகள். இவற்றை முத்திரைக் கவிதைகள் எனச் சொன்னாலும் அது மெய்யுரைதான். இந்த நூலைப் படித்துப் பார்க்குங்கால் மனத்திலெழுந்த உணர்வுகளைப் பதிவு செய்வதில் உளமகிழ்வு கொள்கிறேன்.
சொல்லில், பொருளில், வடிவத்தில் என எல்லாக் கூறுகளிலும் கவிஞர் பரமகுரு அவர்களின் எழுத்துகள் ஒளிர்கின்றன. தவத்திரு (அமரர்) குன்றக்குடி அடிகளாரைத் ‘துறவிவேந்தே’ என்றழைப்பது புதுமையிலும் புதுமை. பாரதியின் பாட்டை ‘நெருப்புப் பாட்டு’ எனக் கூறுவதும் அப்படியே. அடிகளார் அவர்களைச் ‘சாதிச் சழக்கைத் தகர்த்தெறியும் போர்வாள்’ எனப் போற்றுவதும் பாரதியை,
எரிதழற் கனலை அள்ளிக்
    குவித்ததைச் சொற்களாக்கிக்
        கொடுமையைப் பொசுக்கும் வீரன்
எனப் புகழ்வதும் வீறுடைய கவிதைக்கான எடுத்துக்காட்டுகள்.
கவிஞர் மரு.பரமகுரு அவர்கள், ‘ஏனோதானோ’ எனக் கவிதை பாடுபவர் அல்லர் என்பதை இந்நூல் அழுத்தமாக அறிவிக்கிறது. கவியரங்கக் கவிதைகளில் இவ்வளவு வித்தகம் காட்ட முடியுமா என்ற வியப்பை இந்நூல் ஏற்படுத்துகிறது.
தமிழ்க் கடற்கும் அவைக்கடற்கும் வணக்கம் செய்தேன் எனப்பாடுவதும், கம்பர் நெறியில்
வான்பரப்பை முழம்போட்டு அளக்கலாமோ?
எனப் பாடுவதும் மிகச்சிறந்த மேடைப் பாவலராக அவரை அடையாளப்படுத்துகின்றன.
பல கவிதைகளில் ‘கதை கூறும் முறைமை’ நன்கு பயன்படுத்தப் பெற்றுள்ளது. இந்த முறைமைக்குள்,
சிந்தையிலே அழுக்குடையோர் மேலோர் இல்லை என்பது போன்ற மேன்மைக் கருத்துகளும் குடும்ப நெறி தாழ்ந்ததால் அது ‘வீட்டை ஒழித்து விடுதிகளைக் கொண்டு வரும்’ என்பது போன்ற எச்சரிக்கைகளும், குன்றக்குடியைச் சிறப்பிக்கும்போது வரும்,
சந்தத் தமிழ்செய்(து) அருணகிரி
    தாள்பதித்துச் சென்ற அமுதத்தமிழ்மண்
என்பது போன்ற சொல் விளையாட்டுகளும் அருமை அருமையாய்க் குடியேறியுள்ளன.
பொதுவாகக் கவிஞர்கள் தம் பாட்டினில் பாரதி, இளங்கோ, திருவள்ளுவர், கம்பன் எனக் காட்டி ஓரெல்லையில் நின்றுவிடுவர். பாவலர் பரமகுரு அவர்கட்குப் பரந்து பட்ட புலமை வீச்சு அமைந்திருப்பதால் துறவைப் பாடும் நேரத்தில்,
தீங்கதனை எண்ணாத அசோகன் மார்க்கஸ்
    அரேலியசும் திகழ்ஞானி சனகன் கண்ணன்
ஈங்குபுகழ்ச் சோழரொடு சேர மானும்
    எத்தனைபேர் பதவிபெற்றும் பற்றற் றாரே!
என்கிறார் இந்த நூலாசிரியர். அடிகளாரைப் புகழும் நேரத்தில் அவரை, ஞானசம்பந்தர் என்கோ, அப்பரென்கோ சுந்தரரென்கோ மாணிக்கவாசகர் என்கோ எனக் கூறி நின்று விடாமல் அன்றிருந்த சேக்கிழாராய்க் காணுவது மற்றுமொரு பதச்சோறு.
போகிற போக்கில் கவிதை எழுதுவதில் நூலாசிரியர்க்கு உடன்பாடில்லை. பாட்டரங்கிற்குத் தரப்பெற்ற குறிப்பிட்ட மணித்துணிகளில் சொல்தோரணம் க(£)ட்டி விளையாடுவதில் அவருக்கு இசைவில்லை. அதனாலேதான்,
கொடைவேறு; தருமம்எனக் கூறல்வேறு;
    குறிக்கின்ற பொருள்முதலிற் கொள்ள வேண்டும்
கொடைமற்ற உயிர்த்துன்பம் கண்டிரங்கிக்
    கொடுப்பதுவாம்! தருமமெனல் மறுமை நன்மை
அடைவதையே கருத்திறுத்தித் தருவதாகும்
என்ற வைர வரிகளை அவர் இழைத்துத் தருகிறார். ஒருவரின் எழில்நிறை தோற்றத்தைப் பாவரிகளில் வரைந்து காட்ட முடியுமா? - இந்த வினாவிற்கு ‘முடியும்’ என்பது கவிஞரின் விடை. ஒரு சான்று.
இரத்தினம்ப தித்தகண்ட சரத்தைப் பூட்டி
    எழில்மிகுந்த செங்குவளை மாலை சூடி
கைச்சரடு, மணிவாகு வலயம் போட்டுக்
    கலைச்சரிகைக் கரையாடை இடையுடுத்துக்
குற்றுடைவாள் தரித்திருகால் வீரத் தண்டை
    குலவக்கால் விரல்மிஞ்சி கொஞ்ச மார்பில்
பொற்பீதாம் பரம்புரள நடையன் போட்டுப்
    புறப்படுவாராம் பிள்ளை அரண் மனைக்கே!
உங்கள் கண்முன் தாண்டவராய பிள்ளை உலா வருகின்றார்அல்லவா? அதுதான் பரமகுருப் பாவலரின் வெற்றி.
அருகிருந்து பார்த்து, அன்பொழுகப் பணிபுரிந்து, அடிகளாரின் திருவடிகளைப் பணிந்து நின்ற கவிஞர் பரமகுரு அவர்கள், அடிகளாரை வண்ணனைப் படுத்துகிறார், அது வருமாறு;
குமுதமொட்டு போன்ற தலைப்பாகை; பொங்கும்
    குற்றாலத் தருவியெனத் தொங்கும் தாடி
அமுதத்தேன் தமிழ்பொழியும் மலர்வாய், வெண்ணீ
    றணிந்தொளிரும் நெற்றி; ஞானம் தேடும் கண்கள்
கேட்டாரைக் கிறுகிறுக்க வைக்கும் ஆற்றல் கவிஞரின் எழுதுகோலுக்கு உண்டு. கவிஞர் அர.சிங்கார வடிவேலர் பற்றிப் பாவ(ல்)ல(£)ர் பரமகுரு பாடுகிறார். கவித்துவம் ததும்பும் அப்பாடல் இதோ!
சிக்கலிலே குடியிருந்து கொண்டே அன்பர்
    சிக்கலெலாம் தீர்த்து வைக்கும் வித்தைக்காரன்
சக்திமகன் சிங்கார வடிவேலன் பேர்
    தாங்கியுள்ள பெருங்கவிஞன்
திருவள்ளுவரின் மறுபிறப்பாகவும் காவியுடுத்த கார்ல் மார்க்சாகவும் அடிகளாரைப் புனையும் கவிஞர், வெண்பா, காவடிச் சிந்து, ஆசிரியப்பா, விருத்தம் எனப் பாவகைகளையும் முறையாகப் பயன்படுத்திச் சுவையூட்டுகிறார். இந்தப்பாக்கள் ஒருபுறமிருக்கக் கவிஞர்கள் எவரேனும் வரவில்லை என்றால் உடனே கருதப்பட்ட இந்தக் கவிஞர் தீட்டியதெல்லாம் அவசரப்பா. இதில் அதிசயம் என்னவென்றால் இந்த அவசரப்பாக்கள் எல்லாமே அதிரசப்பாக்களாகவே இருக்கின்றன.
சிலம்பைப் பாராட்டும் கவிஞர் உச்சகட்டமாக,
அரசிளவல் சிலம்பின்ஒலி அழகுதமிழ் கொழிக்கிறது
திருமகளாம் மாதவிகை திருமுகங்கள் வரைகிறது
திருமகளாம் மாதவிகை திருமுகங்கள் வரைவதனால்
பெருமிதமாய் இயற்றமிழ்தான் பிறங்கிஒளி விரிகிறது
என இளங்கோவடிகளாய் இசைக்கிறார். பிசிறுதட்டாத கானல்வரி மீண்டும் ஒலிக்கிறது.
நீச்சலறியான் கடலில் விழுந்தாற்போல எனப் புதிய உவமைப் புறப்பாடு,
அடுத்தவன் எப்படிக் கெட்டான்ஐயா என்றால்
    அடடா என்றிரங்கிடுவான்; சிலநாள் சென்றால்
கெடுத்தவனே இவன்தான் என்றறிவோம்!
என நடப்பியலின் படப்பிடிப்பு.
தமிழ் படிக்கத் தமிழர்களே கூசு கின்றார்
    தாய்செத்தால் மக்களென வாழ்தல் கூடும்!
தமிழ் செத்தால் தமிழரென வாழ்வா ருண்டோ?
என்ற கவலைப்பாடு,
நட்டாற்றில் விட்டுவிடும் புகழின் காய்ச்சல் என்ற ஒருவரி அறவுரை,
பூண்விளங்கும் ஒளிவீசும் மாதவிப் பெண்
    புதுப்பாட்டு, பெண்குலத்தின் புரட்சிப் பாட்டு
ஆண்கள் மட்டும் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
    அப்போது பெண்மையும்கற் பழிந்திடாதோ?
மாண்புரைப்பீர்! எனக்கேட்ட பாரதிக்கு
    மறைமுகமாய் அடியெடுத்துக் கொடுத்த பாட்டு
என்ற இலக்கிய வரலாறு,
கம்பனுக்கு மேல்கவிஞன் ஒருவ னில்லை
    கனித்தமிழ்க்கு மேல்இனிய மொழியு மில்லை
நம்பெருமை நாமறியா திருக்கின் றோமே
என்ற இனஞ்சுட்டும் கடமை போன்றவை பரமகுருப் பாவலரின் கவியரங்கப் பாடல்களில் இழைந்தொளிரும் ஒளிவீச்சுகள், ஒளிபடைத்த கண்ணராகப் பாவலரைப் பார்த்து மகிழ்கிறோம்.
ஏராளமான தமிழ் இலக்கியவரிகளைத் தம் கவிதைக்குள் புகுத்திப் புதுமை செய்துள்ள நூலாசிரியர் பாரதப் பாஞ்சாலிக்கும், பாரதிப் பாஞ்சாலிக்குமான வேறுபாட்டை நுவல்கிறார். பாண்டித்துரைத் தேவர் பாடப்பெறுகின்றார். தம்காலச் செய்திகளை நயம்படத் தரும் கவிஞர் மொழி, இனம், நாடு ஆகியனவற்றை உள்ளத்தில் அமர்த்தி ஏத்துகிறார். உள்ளத்து உள்ளது கவிதையாக வருகிறது. கவித்துவத்துடன் வருகின்றது.
இந்த நூற்கவிதைகளை இதழ்கள் உச்சரித்துப் பார்த்து உவகைகொள்ளும் அதேநேரத்தில் படிப்பாரின் உள்ளம் சங்கவரிகளைப் போன்று உச்சரிக்கும் வரிகள்.
அகவும் மயிலே! அகவும் மயிலே!
அழகன் வாழும் குன்றக் குடியில்
அடிகள் நிழலாய் அசையும் மயிலே!
பரம குருவெனும் பெயரில் உலவும்
பறம்புமலைக் கபில, உந்தன் கவிதை
பாற்சோறு போன்ற ஊட்டச் சத்து!
அதனால் தமிழர் நலம்பெற் றோங்க
பாடுக பாட்டே! இன்தமிழ்
உயர இன்னும் பாடுக பாட்டே.!

 

முனைவர் அ.அறிவுநம்பி
பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்

அமுதத் தமிழ்

“நாம்  எதை நினைத்தாலும், எதை உணர்ந்தாலும் எதைச் செய்தாலும் இறைவனுக்காகவே, இறைவனை நெருங்குவதற்கு ஒரு வழியாகவே செய்ய வேண்டும். மேலும், மேலும் இறைவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ அப்படியே ஆகவேண்டும். பரிபூரண நேர்மையுடனும், தூய்மையுடனும் இறைவனுடைய இச்சையை வெளிப்படுத்தும் திறமையைப் பெறவேண்டும். இறைவனுடைய கருவிகளாக இருக்க வேண்டும். மனிதன் தன்னை முற்றிலுமாக இறைவனுக்குச் சரணாகதி செய்துவிட்டால், அவன் இறைவனுடன் ஐக்கியப்படுகிறான்” என்று ஸ்ரீஅன்னை தமது சாதகர்களுக்கு அருளுரையாகச் சொன்னார். இதனையே யோக வாழ்க்கையின் நெறிமுறைகளில் முதல்பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன் உரைக்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.
“வாழ்க்கையையும் அதன் இடர்ப்பாடுகளையும் பொறுமையுடனும், உறுதியுடனும் சந்திக்கத் துணிச்சல் இல்லாதவனால் யோகசாதனையில் எதிர்ப்படும் அவற்றைவிடப் பெரிய உள் இடர்களைச் சமாளிக்க முடியாது. அமைதியான மனத்துடனும், திடமான துணிவுடனும் தெய்வசக்தியின்மீது முழுநம்பிக்கையுடன் வாழ்வையும் அதன் சோதனைகளையும் சந்திப்பதே இந்த யோகத்தின் முதல்பாடமாகும்” எனும் இந்த அறநெறிச்சாரம் நாள்தோறும் என் கண்ணில்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு சிலரது வாழ்க்கையில் செப்புப் பட்டயமாக வழங்கப்பட்டுள்ளதை நேரில் கண்டுணர்ந்து வியந்து வருகிறேன். அப்படி நான் பெரிதும் போற்றும் மூத்த சகோதரர் கவிஞர் மரு.பரமகுரு ஆவார். சிலம்பு தந்த இளங்கோவடிகள், பாரதசக்தி மகாகாவியம் படைத்த கவியோகி சுத்தானந்த பாரதியார் விழாக்களில் கவியரங்க மேடைகளில் ஒன்றாகக் கவிதையளித்திருக்கிறோம். தந்தையர்வீடாகவே நமது குடும்பம் கருதிப் போற்றும் குன்றக்குடித் திருமடத்தின் கவிஞர் பரமகுருவின் கவிதைகள் குற்றால அருவிபோல மடமடவென்று முரசு கொட்டும். சாரல் போல சிலுசிலுவென்று சிலிர்ப்பூட்டும். ஞாயிற்றின் வெம்மை என்னும்போதே குளிர்நிலவின் தண்மை நம்மைச் சூழும். இன்றளவும் மரபுத்தேரேறி வலம் வரும் மண்ணின் மைந்தர் இவர். பறம்புமலைத் தேனூற்றிக் குன்றக்குடித்தினைமாவில் தமிழமுது பிசைந்து வாசிப்பிற்கும் கருத்துக்கும் நல்விருந்து நல்குகிறார். செந்தமிழ்க் கவிதை இலக்கணம் கற்றுக்கொள்ள இவரது கவிதைத் தொகுப்பினை எடுத்துவைத்துப் படித்தாலே போதும். தேறிவிடுவோம்.
‘அப்பர் என் காதலன்’ எனும் தலைப்பு, கண்ணன் என் காதலன் என்று நம் பாரதியார் உருகிக் களித்ததுபோல!
கவிஞர் பரமகுரு இசைக்கிறார்:
“வானத் தெழுந்து வருங்கதிரின் செவ்வொளியில்
தான்மலரும் தாமரைப்பூ; தண்முகிலின் தோற்றமதில்
புள்ளிமயிலாடும்; பொங்குமதி தன்வரவால்
துள்ளி எழுந்தாடும் சூழ்கடல்நீர்; இன்னவைபோல்
காலத்தால் தூரம்; கருத்தாலும் தூரம்; உருக்
கோலத்தால் தூரம்;நற் கொள்கையினால் தூரம்-அவர்
வாழ்ந்தவரே யானாலும் வாக்கின் ஒளிவீச்சுப்
பாய்ந்தென்றன் நெஞ்சப் பதுமம் மலர்க்கும்;எழில்
வாய்ந்த அறவாழ்வின் மாண்புறுத்தும்; இன்பூட்டும்;
ஓய்ந்து களைத்த உளமலர்த்தும்! அன்னவரைக்
காதலராய்க் கொண்டுஅவர் காட்டும் வழிநடந்தால்
ஏதமிலா வாழ்வதனை எய்திடலாம் என்னுமுண்மை
கண்டேன்; களித்தேன்....”
நாயகி பாவத்திலே, தென்னகத்தின் ஞானக்கொழுந்தை, நவயுகத்தை ஆக்க வந்த சேனாபதியைப் பார்த்துப் பார்த்துப் பரவசமுற்ற பரமகுரு, அப்பர்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடித்தொழுதேத்தும் இப்புதுமுறை, திருமுறையில் வைத்தெண்ணப்படவேண்டிய பாடலாகும்.
அன்றைய அப்பரைக் காதலித்த பெருங்கவிஞர், அவர்கண்முன் தினமும் காட்சியளித்த இன்றைய அப்பராக விளங்கும் குன்றக்குடி சாமியின் அணுக்கத்தொண்டராக விளங்கும் அருள்நெறிக் கவிஞர், பரமகுரு, ஞானத் தமிழ்மண்ணின் தவப்பயனாய் வந்த சாமியைப் பற்றி எப்படிப் பாடியிருப்பார் என்று கவிதைத்தொகுப்பினுள் எட்டிப்பார்த்தேன். தொட்ட இடமெல்லாம் திருநீறு; படித்த பக்கமெல்லாம் காவி அக்கினியாறு; பதித்த வாசகமெல்லாம் முருகன் கழல்; செதுக்கிய வரிகளெல்லாம் அமுதத்தமிழ். குன்றக்குடி அடிகளாரின் குன்றாப் பெருமையை எப்படியெல்லாம் ஏற்றிப்போற்றித் தன்னை மெய்யடியாராய் இழைத்து இழைத்து இறைக்கிறார் கேளுங்கள்:
“திருக்கோயில் உழவாரம் செய்த தாலே
திருநாவுக் கரசரென்பேன்! கடவுட் கொள்கை
மறுத்தாரைத் தருக்கத்தால் வென்ற தாலே
வளர்ஞான சம்பந்த ரானார் என்பேன்!
அருள்திறத்தால் பொருட்செல்வம் அமைந்த தாலே
ஆரூரர் இவர்என்பேன்! தமிழால் நெஞ்சை
உருக்கியதால் திருவாத வூரர் என்பேன்!
ஒருவர்இவர் நால்வரெனத் திகழ்ந்தார் என்பேன்!”
இப்பாடலில் எண்சீர்விருத்தம் இயல்பாகத் தடையேதுமின்றி சொல்லுருக்கி உவந்தோடி வருகின்றது. நால்வராகவே தெரியும் தமிழ் மாமுனிவரை வியக்கும் பாங்கில் நால்வரின் பெருமையும், கவிஞரின் மொழிச்சிறப்பின் அருமையும் ஒருசேர ஒளிபெற்றிலங்குகின்றன என்பதை உணரும்போதுதான் நம் ஞானச் செம்மொழியின் பரம்பரைச் சிறப்பு குன்றின்மீதேறிக் கொடிபறக்க விடுவது காட்சிப்புலனாகிறது.
சங்கத் தமிழ் கேட்பதற்காகவே திருவிளையாடல் புரிய வந்த இறைவன் சங்கரனையே நேராக நோக்கி நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றுரைத்த புலவர் நக்கீரன் பற்றி ஒரு கவியரங்கத்தில் இக்கவிஞர் கவிதை வழங்குகிறார். அதில் பதம் காட்ட ஒரு சிறுநெல்மணிச் சோறு இதோ:
“உலகமொரு குடும்பம்; அதில் வாழ்வோ ரெல்லாம்
உடன்பிறப்பே! வேற்றுமையே யில்லை! இன்பம்
உலகவுயிர் அத்தனைக்கும் பொதுவாம்! என்ப(து)
ஒப்பில்லாத் தமிழ்நெறியாம்! அதனால் கீரன்
‘உலகமுவப்ப’ எனும்சொல் முதலில் வைத்தான்
உயர்தமிழின் இதயஒலி அதுவே யாகும்
நலமுறப்பன் னூறாண்டு கட்குமுன்பே
நக்கீரன் நாட்டியநன் னெறியீ தாகும்!”
என்று உலகம் எனும் மங்கலச்சொல்லையே முதற்சொல்லாக வைத்து சேக்கிழாரும், கம்பரும் செய்த கவிதை நூல்களைப் போலவே நக்கீரனும் அவர்க்கும் முன்னரேயே இனிமையாக உலக எழுத்துப்பணியை ஆரம்பித்து வைத்துள்ளார் எனும் செய்தி இக்கவிஞரின் வாக்கில் வரலாற்றுப் பதிவாக அமைந்துவிடுகிறது.
குன்றக்குடியைத் தந்தையகமாகவும், தாயகமாகவும் கொண்டுவிளங்கும் பாவலர் பரமகுரு, குன்றக்குடி ஞானாலயத்தின் அதிபதி முருகனை இவர்முன் நிற்கும் பழவடியாரைப் போல மெய்யுருகிப் பாடுகிறார். பக்தி, பரசிவவெள்ளமெனப் பாய்ந்து வருகிறது. இருமயில்களென வள்ளி, தெய்வானை என்னும் இச்சை, கிரியா சக்திகள் இணைந்திருக்கும் அழகிய தமிழ்க்கடவுள் முருகனைப் பார்த்துப் பார்த்துக் காதலாகிக் கசிந்துருகிப் புனைந்த பாடல்கள் பலப்பல. அவற்றுள் என்னை உருக்கிய பாடல் இது:
“மூண்டமனப் பகைக்கனல்நீ றாக்கும் தெய்வம்;
முழுநீறு பூசியளிர் முருகுத் தெய்வம்;
வேண்டிடுவார் வேண்டுவன ஈயுந் தெய்வம்;
விரியன்பு மனவயலில் விளையுந் தெய்வம்;
ஈண்டுடல்நோய் தீர்க்கும்கண் கண்ட தெய்வம்;
எய்ப்பினிலே வைப்பான இனிய தெய்வம்;
ஆண்டவன்குன் றக்குடியில் அமர்ந்த தெய்வம்;
ஆறுமுகத் தெய்வமதைத் தொழுதே உய்வம்!”
இப்பாடலைச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, என் தாயாரும், சுற்றத்தாரும் கைகுவித்து அருகிலிருந்தபடி தொலைவிலுள்ள முருகனைத் தரிசித்தனர், தூரம் கடந்து! ஆம்! நமது குடும்பத்தினரின் குலதெய்வமும் குன்றக்குடி அருள்முருகன்தான். இப்பாடலை எழுதும்போதே மல்லிகையும், மருக்கொழுந்தும் பன்னீர்ப்பூவும் பரிசுத்தத் திருநீறும் மணக்கிறது, வேதபுரத்து வீட்டிற்குள்ளும், மெய்!
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான ஞானப்பெயர்த்தி எனக்கு அவருடைய நூற்றாண்டு விழாவில் கவிஞர் பரமகுரு அவர்களுடன் சோழபுரம் மேடையில் ஒன்றாக அமர்ந்து கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சுத்தானந்தர்மீது பரமகுரு வைத்துள்ள அதீதமான அன்பும், மரியாதையும் கவிதை வரிகளாக ஊற்றெடுத்துச் சபை நிறைத்தன.
“இறைவனின் கைவி ளக்காய் இந்நாட்டில் தொடர்ந்து தோன்றி
வருஞான பரம்ப ரையில் வந்தவர் சுத்தா னந்தர்;
அருள்யோகி வழியில் வாழும் ஆற்றலற் றவர்க ளாகிப்
பொருளையே தேடித் தேடிப் புழுவாழ்க்கை வாழ்கின் றோமே!
என்று இக்காலக்கொடுமை மனிதரை நினைந்து வருந்தி, கூடவே, ‘ஆயிரம் சுத்தானந்த அன்பர்கள் கூடித் தொண்டின் வாயிலைத் திறந்தால் போதும். மண்ணகம் சொர்க்கமாகும்’ என்று நம்பிக்கை விதைமுளைப்பாரி வைத்தார் கவிஞர் பரமகுரு. எனக்குப் புத்துலக வாழ்வின்மீது மறுநம்பிக்கை உண்டாயிற்று.
பண்டைய புலவர்களையும், சமயஞானியரையும் பற்றியே இப்பாவலர் பாடியுள்ளார் என்றெண்ணிவிட வேண்டாம். இந்நூற்றாண்டுப் புலவர் அனைவருக்குமே மேல்வரிச்சட்டமாக விளங்கும் தந்தை கவிபாரதியாரைப் பற்றிய இவரது சொற்பெருக்கு வீரம் விளைவிப்பவை.
“பாரதி யென்றால் அந்தப் பதமதே வீர மாகும்.
பாரதிர்ந் திடவே பாடும் பாரதி, சுரண்டல் வர்க்க
வேரதிர்ந் திடவே பாடும் விறல்மிகு கவிஞன்! பாட்டில்
வீரமே கண்டான்! நாட்டின் விடுதலை விளைத்தான் கண்டீர்!”
என்று பாரதியின் வீரத்தினையும், நெருப்பென ஒளிரும் அறிவுச்சுடரினையும், பொதுவுடைமைச் சீர்திருத்தத்தையும் ஆற்றல்மிகுந்த சொற்களில் அறுசீர்விருத்தத்திலும் அழுத்தமான சீர்களில் கவிக்குரல் நம்மைத் தட்டியெழுப்புகிறது.
இக்கவிதைத்தொகுப்பில், கவியரங்கக் கவிதைகளே இடம்பெற்றுள்ளன. அதனால் பாட்டரங்கத்தலைவர், உடன்பாடுவோர், அவையோர் பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வருகின்றன. என்றாலும், பெரும்புலவர்களின் பாரம்பரியப் பெருமையைக் கட்டிக் காத்துவரும் மரபுவழிப் பாடல்களை எம்போன்றோர் படித்து அனுபவிக்கும்படியாகவும், வாழ்வின் அனைத்து விழுமங்களையும் உயர்வாக உரைப்போரின் செந்தமிழின் அழகுகளை உள்வாங்கிக் கொள்ளும்படியாகவும், அற்புதமாக அமைந்துள்ளது இக்கவிதை நூல். இளைய தலைமுறையினர் படித்துப் பயனுற வேண்டிய நூல்.
குன்றக்குடித் திருடத்தின் ஆதீனப்புலவராக விளங்கும் பெரியவர் மரு.பரமகுருவிற்கு அருள்தந்தையாரின் குருவருள் நிரம்பியுள்ளதாலும், தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் அருளாசிகள் என்றும் இணைந்தே உடன் இருப்பதாலும் எமது எழுதுகோல் தாள் பணிந்து வணங்கி எழுகிறது.
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்கவே!

 

கவிஞர் இரா. மீனாட்சி
இயக்குநர், ஆரோவில் தமிழ் மரபுமையம்

 

முன்னுரை

இந்த நூல் எளியேன் கவியரங்குகளில் பலவற்றில் பாடிய கவிதைகளின் தொகுப்பு நூலாகும். புலவர்கள்  பலர் கூடியுள்ள அரங்கத்தில் நூல்களை அல்லது கவிகளைப் பாடிய புலவன் வாசித்து அரங்கத்தின் ஏற்பினைப் பெறும் நிகழ்ச்சி பண்டைய தமிழகத்தில் கவியரங்கு எனப்பட்டதாக அறிகின்றோம். அக்காலத்தில் கவிகளிலேயே நூல்கள் இயற்றப் பெற்றதால் நூலரங்கேற்றமும் கவியரங்கேற்றம் என வழங்கலானது. ‘கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர்’ (இறையனார் அகப்பொருளுரை) என்பன போன்ற பதிவுகளை நாம் இலக்கியங்களிலே காணலாம். இந்நிலை சங்க காலம் முதல் கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நிலவியிருந்தது. கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இலக்கிய விழாக்களில் இப்போது நிலவும் புதிய கவியரங்க முறை அறிமுகமானது. இந்தக் கவிரயங்கங்களில் அரங்கத் தலைவர் ஒருவர் இருப்பார். சிலரோ, பலரோ கவிஞர்களாக அமர்ந்து தலைவர் ஒவ்வொருவராக அழைக்க அரங்கில் கவிதை வாசிப்பர். அப்படி எழுதிக் கொண்டு வரும் எந்தக் கவிதையையும் வாசித்து விட்டு கவிஞர் அமர்ந்து விடலாம். குறை, நிறை குறித்த திறனாய்வு செய்வதில்லை. இது இக்காலக் கவியரங்கம் பற்றிய நிலை.
இவ்வாறான கவியரங்கங்கள் இலக்கிய விழாக்களில் மட்டுமின்றித் தமிழ் மக்கள் வாழும் வேறு பல நாடுகளிலும் நிகழ்ந்து வருகின்றன. இவற்றின் நிறை, குறை எப்படியாயினும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒருவகையில் துணை  செய்வனவேயாம். 
எளியேன் அருள் நெறித் தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெருமானிடம் பணியில் சேர்ந்த காலம் முதல் (1968 முதல்) தான் கவியரங்குகளில் பாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுவும் திருமடம் சார்ந்த இலக்கிய விழாக்களில் எதிர்பாராத நிலைகளில் அருள் நெறித் தந்தையவர்களின் உடனடி ஆணையிலிருந்து தப்பிக்க முடியாமல் பாடிய கவியரங்கக் கவிதைகளே மிகுதி. கவியரங்க வாய்ப்புகளை நான் என்றுமே தெடிச் சென்றதில்லை. அப்படித் தேடிச் செல்லும் மனமும் இருந்ததில்லை. காலமும் இருந்ததில்லை.
1968 திருப்புத்தூரில் திருமுறை விழாக் கவியரங்கம். அதுதான் நான் பங்கேற்ற முதற் கவியரங்கம். ‘சிவபெருமான் என் ஆசான்’ என்பது எனக்கு அமைந்த தலைப்பு. இத்தலைப்பில் கவியரங்கேற இசைவளித்த கவிஞர் வரஇயலாத தந்தி, நிகழ்ச்சிக்கு முதல் நாள் கிடைத்தது. அந்தத் தலைப்பில் பாட அடிகள் பெருமான் எனக்கு ஆணையிட்டார். திருமுறைவிழாப் பணி நெருக்கடியோடு கவிதை இயற்றி அரங்கில் வாசித்தேன். அது பலர் பாராட்டைப் பெற்றது.
14.12.1968 இல் கோவை காந்தி - மகாகவி பாரதி விழாக் கவியரங்கம். ஈரோடு தமிழன்பன் வரவியலாமைத் தந்தி அரங்கத் தலைவர், முன்னிலைக் கவிஞர் வாசிப்புக்குப் பின் வந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெருமான் கட்டளைக்கிணங்க, கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பணியைச் செய்து நிறைவு செய்தேன். இவ்வாறு நான் கவியரங்கத்தில் பாடிய கதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இந்தக் கவிதைகளின் தரம் பற்றிச் சொல்ல வேண்டியது படிப்போரின் பொறுப்பாகும்.
இத்தொகுப்பு நூலில் இடம் பெறாத கவியரங்கக் கவிதைகள் பல எஞ்சியுள்ளன. சில காரணங்களால் அவற்றையெல்லாம் ஒரே தொகுப்பாகக் கொண்டு வர இயலாத நிலை. எஞ்சியுள்ள அக்கவிதைகளைப் பின்னர் ஒரு தொகுப்பாக வெளியிட எண்ணம்.
என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அறிஞர்கள் இருவர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளனர். ஆரோவில் தமிழ் மரபு மைய இயக்குநர் கவிஞர் இரா. மீனாட்சி அவர்கள் பழுத்த இலக்கியப் புலமையர். சாகித்ய அகாதெமியின் தமிழ் இலக்கியத் துறை ஆலோசகராக விளங்கிச் சிறந்த பணி செய்து வருபவர். சிறந்த கவிஞர். ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் வழியாகத் தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் தொண்டாற்றும் தகையாளர். கவியோகி சுத்தானந்த பாரதியின் ஞானப் பேத்தியார். அவர் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.
புதுச்சேரி மையப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் திரு.முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் நுண்மாண் நுழைபுலமையர். காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகவும் பெருங்கவிஞராகவும் விளங்கிய என் பெருமதிப்பிற்குரிய திருமிகு. பூ.அமிர்தலிங்கனார் அவர்களின் அருமைத் திருமகனார். பல அரிய ஆய்வு நூல்கள் எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். முதுகுளத்தூர் பெருங்கவிஞரான அட்டவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் அவர்களின் மரபினர். என் அன்பிற்குரிய இளவல். அவர் இந்நூலுக்கு அருமையான ஊக்கஉரை வழங்கியுள்ளார். இவ்விரு அறிஞர் பெருமக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
இந்தக் கவிதைகளைத் தொகுத்து வழக்கம் போல் நூல் வடிவாக்கி வழங்குபவர் என் உடன்பிறவா அருமை அன்புத் தம்பி பேராசிரியர் முனைவர் சேதுபதி அவர்கள். அவர் தொடர்ந்து என் படைப்புகளை வெளியிடுவதில் நிறைந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இவர் தம் அன்பிற்கும் ஆதரவுக்கும் கைம்மாறு செய்ய இயலுமோ? அதற்கு நான் பல பிறவிகள் எடுத்தாக வேண்டும். இந்த நூலை அழகுறப் பதிப்பிக்க, செல்வன் சொ. அருணன் மேற்கொண்ட முயற்சி பெரிது. என்பால் அன்பு செலுத்தும் தம்பியரில் இவர் முதன்மையர். தமிழ் இலக்கியத்தில் எம்.ஃபில் பயிலுபவர். சிறந்த எழுத்தாளர். கவிஞர். இப்பிள்ளைகளுக்கு எல்லா வளமும் வழங்கியருள, குன்றக்குடி முருகன் திருவடி பணிந்து வாழ்த்துகிறேன்.
‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்’
என்பது வள்ளுவர் வாக்கு. பொருளற்ற என்னையும் இந்நூற் பதிப்புச் செலவுக்கு நிதி வழங்கி உதவுவதன் வழிப் பொருளவாகச் செய்துள்ள எனது உயிரினும் மேலான நண்பர் பெருந்தகை, கோவை, சரவணம்பட்டி திருமிகு. பழ. தரும. ஆறுமுகம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்துய்வேன்? அவர் வாழ்கெனவே வாழ்த்துதன்றி வழியறியேன்.
தமிழ்க் கவிதை நூல்கள் இக்காலத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளி வந்துள்ளன. அந்தக¢கவிதை நூற் கடற்பரப்பில் இந்நூல் ஒரு சிறு துளி. இந்நூல் படிப்போர்க்குப் பயனும் இன்பமும் நல்குமாயின் அது யான் செய்த தவப்பேறாகும். நன்றி. வணக்கம்.                    அன்புடன்,
  மரு. பரமகுரு
குன்றக்குடி

02.02.2011

வணக்கங்களுடன்....

 

‘மங்கலச் சொல் உலகமெனும் சொல்லாம் அந்த
    மணிச் சொல்லுக் கீடான சொல்மற் றுண்டோ?
உலகமெலாம் அருட்குடைக்கீழ் ஆண்டு வரும் குன்றக்குடி யாவர்க்கும் சொந்தக் குடியாய், தொப்புள் கொடியாய் ஆயிற்று. பாரியை இழந்த பின்னால் பறம்புக் கொடிக்குக் குன்றக்குடியே படர்தேரானதைப் போலவே. அருள்நெறித் தந்தையாய் நின்று மகாசன்னிதானம் நம் உள்ளத்து என்றும் அருள் பாலித்துக் கொண்டிருக்க,  அருள்நெறித் தாயென விளங்கும் ஆதீனப் புலவர் மரு. பரமகுரு  குன்றக்குடித் திருமடத்திருந்து ‘பாடுகிறேன் பரமகுரு’ என்று ஓங்காரத் தொனியெழுப்பிப் பாடுகிறார்.
தமிழும் அமுதும் ஒன்றெனக் காட்டுதற்குக் கிடைத்த பல்லாயிரம் சான்றுகளில் இந்நூலும் ஒன்றாய் விளங்கும். அருளையும், பொருளையும் முருகக் கடைந்து உள்நெக்குருக இசைக்கும் அவர்தம் கவிதைகள் கவியரங்கேறி முழங்கியவை. கவியரங்க மேடைகளில் உரத்த சிந்தனைகளை விதைத்த கவிதைகளின் தொகுப்பு இது.
தொண்டலால் தன்பணி வேறறியாத தூயர்; அவர் வாழ்வில் தேடாது கிடைத்த அரிய சந்தர்ப்பங்களை அழுத்தமாய்த் தன் வயப்படுத்தித் தமிழுக்கும் தொண்டாற்றிக் கவிப் படையல் செய்திருக்கிறார். திருவருள் கூட்டுவிக்க, குருவருள் ஆணையிட அரங்கேறிய தருணங்கள் கவிதைகளால் காட்சித் தோரணமாய், சீர் எழுத்தின் ஓவியமாய் நூலுள் எழுந்து நம் மனத்துள் விரிகின்றது.
எல்லாவற்றும் மேலாய் இழப்புத் துக்கத்தில் தாயிழந்த கன்றாய் மகாசன்னிதானத்தை அழைத்துப் ‘பாடுகிறேன் பரமகுரு! கேட்கிறதா சாமி’ எனப் பாடும்போதில் படிப்போர் நெஞ்சில் இருந்து நீர்த்தாரை பெருகுகிறது. ஒருவர் இவர் நால்வரெனத் திகழ்ந்தவரைக் காணாதபோதில்,
‘கன்றொன்று தாய்ப்பசுவைக் காணா விட்டால்
    கதறாதா? மழைநீரின் வடிகால் ஏறிச்
சென்றசிறு மீன்தண்ணீர் வற்றி விட்டால்
    செதில்கரையில் படத்துள்ளித் துடித்திடாதா?
எனத் துடித்து அத்துடிப்பை எல்லோர் நெஞ்சிலும் கவியச் செய்கிறார். பின் அவர்தேறி,
காலமகள் பெற்றமகன் கண்ணுறங்கி விட்டார்
    கண்ணுறங்கி விடினுமவர் கருத்துறங்க வில்லை
பாலமுதத் தமிழ்பொழிந்தார் படுத்துறங்கி விட்டார்
    படுத்துறங்கி விடினும்அவர் பணியுறங்க வில்லை
என்று கவிதையாலே நம்மைத் தேற்றவும் செய்கிறார்.
சீலநிறை பொன்னம்பல தேசிகரைத் தந்தார்
    தேசிகரைத் தந்ததனால் வீசுபுகழ் பெற்றார்
என அத்தேறுதலுக்குச் சாட்சியாய்த் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை நமக்குப்  புகலிடமாக்கிக் காட்டுகிறார். அவ்வழி பற்றியே தம்தொண்டு தொடர்கிறார். அத்தகைய கவித்தொண்டர்தம் கவிதை நூலைப் பதிப்பிக்கும் பேறு, திருப்பேறு.
எப்போதும் பாடுவதையே விரும்புகிற கவியுள்ளத்தின் அடையாளமாய் நூலுக்குத் தலைப்பும் அமைந்திருக்கிறது. இன்தமிழை உயர்த்தும் அப்பாடலை ‘இன்னும் பாடுக பாட்டே’ என நம் யாவர் பொருட்டும் வேண்டி அண்ணன் முனைவர் அ.அறிவுநம்பி அவர்களும், ‘அமுதத்தமிழ்’ எனச் சுவைத்து அக்கா கவிஞர் இரா. மீனாட்சி அவர்களும் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். அவர்கட்கும் நம் நன்றியினையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறோம்.
    இந்நூலை வெளியிடுதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த முனைவர் சொ.சேதுபதி அவர்களுக்கும், பொருளோடு அருளும் நல்கும் வணக்கத்திற்குரிய பழ. தரும. ஆறுமுகம் ஐயா அவர்களுக்கும்  நன்றியும் வணக்கங்களும்.
    மரபு மாறிப் புதுமை புக்கினும் தமிழை, கவிதையை எக்காலும் ஏற்றுப் போற்றும் வாசகத் தமிழுள்ளங்களுக்கும் வணக்கங்கள்.
 

கபிலன் பதிப்பகத்தார்

 

Contact

Kapilan Pathippagam,

arunankapilan@gmail.com

321, Mahaveer Nagar,
Lawspet
Puducherry -605 008.
India

+91.9442379558

Search site


 

கபில வரிசை

27/11/2009 17:11

published

  

© 2009 All rights reserved.

Make a free websiteWebnode